காந்தி - இர்வின் சம்பாஷணைப் பலன் என்னவாகும்? குடி அரசு - தலையங்கம் - 22.02.1931

Rate this item
(0 votes)

இந்தியாவின் முன்னேற்றமானது காங்கிரஸ் ஆரம்பித்தகாலம் முதலே தடைப்பட்டு விட்டதானாலும் சைமன் கமிஷன் ஏற்பட்டது முதல் அதன் பேராலும் பல தடைகள் ஏற்பட்டு வந்தன. இப்போது தொடர்ச்சியாக சட்ட மறுப்பின் மூலமாகவும் வட்ட மேஜை மகாநாட்டின் மூலமாகவும், போறாக் குறைக்கு காந்தி-இர்வின் சமரசப் பேச்சின் மூலமாகவும் மக்களின் கவனங் கள் இழுக்கப்பட்டு காலம் வீணாகிக் கொண்டே வருகின்றது. அரசியலையே வாழ்வாகவும் தொழிலாகவும் கொண்டவர்களால் இவை பிரமாதப்படுத்தப் பட்டு பொது மக்களின் கவனங்கள் அதில் திருப்பப் படுகின்றன. 

 

எப்படியிருந்த போதிலும், இந்த காந்தி - இர்வின் சமரச சம்பாஷணை நாளைக்கு என்னமாக முடிந்த போதிலும் கடைசியாக இது ஒரு மினக்கெட்ட வேலையாக முடியப்போகின்றதோழிய காரியத்தில் ஒரு பயனையும் உண்டாக்கப்போவதில்லை என்பது மாத்திரம் உறுதியேயாகும். 

சைமன் கமிஷன் ரிப்போர்டிலும் வட்ட மேஜை மகாநாடு முடிவிலு மாவது பெண்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற பிரதிநிதித்துவத்திற்கும் தாழ்த்தப் பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றமடையத்தக்க பிரதிநிதித் துவத்திற்கும் ஹேது ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம். இது இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்கு சுதந்திர உணர்ச்சி வழங்கினது போய ஆயிற்று. ஆனால் காந்தி - இர்வின் சம்பாஷனையால் ஒன்றுமே ஏற்படப் போவதில்லை என்று தான் சொல்லவேண்டும். 

சமரசப் பேச்சு பேசுவதற்கு முதல் முதலாவது திரு. காந்தியவர்களின் நிபந்தனைகள் ஆறு என்று சொல்லப்படுகின்றது. அவற்றில்

முதலாவது அரசாங்கக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது, 

இரண்டாவது சர்க்கார் அடக்கு முறைகளை நிறுத்த வேண்டும் என்பது 

மூன்றாவது போலீசார் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது, 

 

நான்காவது பரிமுதல் செய்த சொத்துக்களைத் திருப்பிக்கொடுத்து விடவேண்டும் என்பது ஐந்தாவது இயக்கத்திற்கனுகூலமாகவும் சர்க்காருக்கு விரோதமாகவும் இருந்ததற்காக தண்டிக்கப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தர்களை மன்னிக்க வேண்டும் என்பது, ஆறாவது கள்ளுக்கடையையும் அன்னிய நாட்டு ஜவுளிக்கடை யையும் மறியல் செய்வதை சர்க்கார் தாராளமாய் அனுமதிக்க வேண்டும் என்பது ஆகிய இவைகளாகும் சட்டமறுப்பு நிறுத்தப்பட்டதாய் திரு. காந்தி அவர்களால் ஒப்புக் கொள்ளப்படுமானால் சர்க்கார் தண்டித்து ஜெயிலில் வைத்திருக்கும் கைதி களை வெளியில் விடுவதிலும் அடக்கு முறைச் சட்டங்களை எடுத்து விடுவ திலும் சர்க்காருக்கு ஆகேடியணையிருக்க சிறிதும் நியாயமிருக்காது என்று நினைக்கின்றோம். பரிமுதல் செய்த சொத்துக்களை திருப்பிக் கொடுத்து விடுவதிலும் சர்க்காருக்கு ஆகேடிபனை இருக்க நியாயமில்லை. ஒரு சமயம் வரி செலுத்தாததால் ஏலம் போடப்பட்ட சொத்துக்களை ஏலம் எடுத்தவர்களி டமிருந்து திருப்பி வாங்கிக் கொடுப்பது சர்க்காருக்கு கஷ்ட மாயிருக்கு மானால் கூட அதற்கு தகுந்த துகையை ஈடு செய்து திருப்பி வாங்கிக்கொடுத்து விடலாம். 

தவிர போலீசார் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டு மென் பதும், தண்டிக்கப்பட்ட சர்க்கார் அதிகாரிகளின் தண்டனையை மாற்றி அவர் களுக்கு உத்தியோகம் கொடுக்கப்படவேண்டும் என்பதும் ஒன்றுக் கொன்று முறண்பட்ட காரியமாகும். 

ஏனெனில் சர்க்காருக்கு விரோதமாய் ஜனங்களுக்கு அனுகூலமாய் நடந்தவர்கள் மன்னிக்கப்படவேண்டுமென்றால் ஜனங்களுக்கு விரோத மாய் சர்க்காருக்கு அனுகூலமாய் நடந்தவர்களும் மன்னிக்கப்பட வேண்டியது சர்க்காருக்கு நியாயம் என்றே தோன்றும், ஒரு சமயம் இந்த நிபந்தனையானது தண்டிக்கப்பட்ட சர்க்கார் உத்தியோகஸ்தர்களைக் காப்பாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டதாக இருந்தாலும் இருக்கலாம். ஆகவே இதிலும் பிரமாத மாக ஜனங்களுக்கு லாபமோ சர்க்காருக்கு நஷ்டமோ இருப்பதாய் விளங்க வில்லை . 

கடைசியாக ஆறாவது நிபந்தனையாகிய கள்ளுக்கடை மறியலும் ஜவுளிக்கடைமறியலும் நடக்க அனுமதிக்கவேண்டும் என்கின்ற நிபந்தனை விவகாரத்திற்கு பொருந்தாததாகவே காணப்படுகின்றது. அவை இரண்டை யும் மறியல் செய்து ஒழிக்கவேண்டியது அவசியமா இல்லையா என்பது வேறு விஷயம். அது ஒரு ராஜி நிபந்தனைக்குப் பொருத்தமானதா என்பது தான் இங்கு யோசிக்கத்தக்க விஷயமாகும். 

 

ஏனெனில் முக்கியமாய் கள்ளுக்கடைமறியல் செய்ததற்காகவும் ஜவுளிக்கடை மறியல் செய்ததற்காகவும் தான் அதிகமானவர்களை கைதி செய்யப்பட்டும், இப்போதும் கைதி செய்துகொண்டும், போலீசாரால் அடிக்கப்பட்டும் வரப்படுகிறது. அப்படி இருக்க அந்தக் காரியங்களை நான் செய்து கொண்டுதான் இருப்பேன் அதற்காக கைதி செய்தவர்களை விட்டுவிடத்தான் வேண்டும்” என்று சொல்வது எப்படிப் பொருத்தமானது என்பது விளங்கவில்லை. வேண்டுமானால் பேசப்போகும் சமாதானத் திட்டத் தில் ஒரு நிபந்தனையாக அதாவது "கள்ளுக்கடைகளை எடுத்துவிட வேண்டும். வெளிநாட்டு துணிகளை இந்தியாவிற்குள் வரவிடக்கூடாது” என்று பேசலாம். 

அதை விட்டுவிட்டு இந்தப்படி கேட்பது "கிளர்ச்சி செய்துகொண் டிருக்க சர்க்கார் சம்மதிப்பது தான் கிளர்ச்சியை நிருத்துவதாகும்” என்று சொல்வதுபோல்தான் காணப்படுகின்றது. 

ஆகவே இவற்றின் விவகாரத் தன்மை எப்படியோ ஆகட்டும். இதனால் எல்லாம் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் பலன் என்ன என்பதுதான் இப்போது இங்கு யோசிக்கப்படும் விஷயமாகும். 

மரியலின் மூலமாய் மது பானத்தையும், அதன் கெடுதியையும் நிருத்திவிடலாம் என்பது சாத்தியப்படக்கூடியது என்று நினைக்கத்தகுந்த காரியமல்ல என்பதே நமதபிப்பராயமாகும். இந்து மதத்தில் 100-க்கு 60 பேர்களுக்கு மேலாகவே இன்றும் இந்துக்களின் கடவுள்களில் சிலவற்றுக்கு கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி வைத்துப் படைக்க வேண்டியிருப்பதும், அதைப் பிரசாதமாய்க் கொள்ளவேண்டியதாயிருப்பதும், சுலபத்தில் மறைத்து விடக்கூடிய காரியமல்ல, கள்ளை நிருத்த வேண்டுமானால் முதலா வதாக அந்தக் கடவுள்களையும், கடவுள் பூசைகளையும், சட்ட மூலபாகவும், மரியல் மூவமாகவும் ஒழித்தாக வேண்டும். இரண்டாவதாக சர்க்காருடைய கள்ளு இலாக்கா நிர்வாகத்தில் நமது மக்கள் இருந்து கொண்டு நிர்வாகம் நடத்திக் கொடுத்து பயன்பெறுவதை நிருத்தியாக வேண்டும். கள்ளுக் கடையில் நின்று கொண்டு செய்யும் மரியலை நிருத்திவிட்டுகள்ளு நிர்வாக இந்திய அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் வீட்டிலும், ஆபீசிலும், மரியல் செய்யவேண்டும். 

இந்தப்படிக்கு இல்லாமல் கள்ளுக் கடையின் முன்னால் நின்று கொண்டு போலி நாடகம் நடிப்பதில் எப்படி கள்ளு நின்றுவிடும்? என்பது நமக்கு விளங்காது. அது போலவே வெளிநாட்டுத் துணியை நிருத்த வேண்டுமென்றால் கப்பலி லிருந்து இறக்குமதியாவதை மாத்திரம் காவல் வைத்துத் தடுப்பதால் ஒருவித பயனும் ஏற்பட்டுவிடும் என்று நினைப்ப தற்கில்லை. ஏனெனில் நம்மை விட அதிகமான கூலி சம்பாதிக்கும் படியான ஒரு நாட்டில் செய்யப்பட்ட சரக்கானது மிக்க குறைந்த கூலிக்குக் கிடைக்கும். 

ஆள்கள் இருக்கும் நாட்டில் கொண்டுவந்து இந்த நாட்டுச் சரக்கை விட குறைந்த விலைக்கு விற்பதென்றால் இதன் குற்றம் எங்கு இருக்கின்றது என்று உணரவேண்டாமா என்று கேட்கின்றோம். இங்கிலாந்தில் நூற்பு நெசவுத் தொழிலில் ஈடுபட்ட கூலிகள் தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு ரூ. ரூ.5ரூ. வீதம் சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் நூற்பு நெசவுத் தொழிலில் ஈடுபட்ட கூலிகள் தினம் ஒன்றுக்கு சிலர் 2 அணாவும் சிலர் 8 அணா, 10 அணா, 12 அணாவும்தான் சம்பாதிக்கிறார்கள். தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 3ரூ. 4ரூ. கூலிகொடுத்து நூற்று நெய்து, போக வரக் கப்பல் சார்ஜ்ஜும் கொடுத்து வரியும் கொடுத்து இந்திய விலையைவிட எப்படி சல்லீசாய் கொடுக்க அவர் களால் முடிகின்றது என்பதை யோசித்து அதற்குத் தகுந்த வழிசெய்யாமல் வெளி நாட்டார் மீது கோபிப்பதில் என்ன பலன் என்றே திரும்பவும் கேட் கின்றோம். ராட்டினத்தையும், தக்களி யையும் வைத்துக்கொண்டு கை நெச வில் நெய்துகொண்டு 2000 வருஷம் உட்கார்ந்து தவம் செய்தாலும், எப்படிப் பட்ட சட்டமறுப்பு செய்தாலும் ஒரு காலமும் நாம் சீமைவிலை அடங்கும்படி துணிகளை வழங்க மாட்டோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள விரும்புகின்றோம். 

யந்திரங்கள் செய்வதில் நமக்குச் சிறிதும் கவலையில்லை. யந்திரங்கள் மூலமாய் வஸ்துக்களை உண்டாக்குவதில் நமக்குச் சிறிதும் கவலையில்லை. அது மாத்திரமல்லாமல் இந்த இரண்டு காரியமும் இந்தியாவின் “தரித்திர நாராயணன் பேரால் பெரிய பாவம்" என்று கருதிக்கொண்டு 1000 வருஷத் திற்குமுன் இருந்த இராட்டினத்தையும், சோம்பேரிகள் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாவதற்காகச் செய்து கொண்டிருந்த தக்ளியையும் கொண்டு சீமைத் துணியை மரியல் செய்ய வேண்டுமென்று சொன்னால் சிறிதாவது அறிவும், சுயேச்சையும் உடையவர்கள் எப்படி உடன்படக் கூடும் என்று கேட்கின்றோம். 

இந்த மாதிரி மறியலால் இந்திய மக்களுக்கு என்ன பலன் கிடைக் கக்கூடும் என்றும் கேட்கின்றோம். இந்திய தேசிய செவ்வமெல்லாம் சாமிக் கும், சடங்குக்கும் அழுதுவிடுவதின்மூலம் ஏழை மக்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டு, ஏழைகளின் அவசியமான சாதனங்களையும், சல்வீசாய் அடைய முடியாமல் இந்தப்படி தடுத்துவிட்டால் எப்படி ஒரு நாடு முற்போக்கடைய முடியும்? 

உண்மையான நல்ல எண்ணத்துடன் மறியல் வேலை செய்ய வேண்டு மானால் மறியலுக்கு வேறு நல்ல காரியம் இல்லை என்று யாராவது சொல்லி விட முடியுமா? இந்திய தேசியத்தின் பேரால், அரசியலின் பேரால், சீர் திருத்தத்தின் பேரால் ஏழைகள் பணத்தை வரியாகத் தட்டிப் பிடிங்கி சம்பள மாகப்பகல் கொள்ளை அடிப்பதை ஏன் மறியல் செய்யக்கூடாது என்று கேட் கின்றோம். உலகத்தில் எந்த தேசத்திலும் அந்தந்த தேச சர்க்காரை நடத்துவதற்கு அந்தந்த நாட்டு மக்கள் அடையும் சம்பளத்தை விட இந்த தேசத்தில் இந்த தேச படித்த மக்களால் தேசியவாதிகளால் 100க்கு 200, 300 பங்கு வீதம் அதிகமாக கொள்ளை அடிக்கப்படுகின்றது. ஏழை மக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் மற்ற தேசமக்கள் அடைவதை விட 100க்கு 50 பங்குக்கு மேல் குறைவாய் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதை யார் கவனித் தார்கள்? கவனிக்கின்றார்கள்? என்று கேட்கின்றோம். மற்றும் இந்த உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் மதத்திற்காகவும் மதம் காப்பாற்றப்படுவதற்காகவும், கடவுளுக்காகவும் கடவுள்கள் காப்பாற்றப்படுவதற் காகவும், அனாவசியமாய் ஒரு தம்பிடியும் செலவாகாமல் கவனிக்கப்படுகின்றது. இந்த தேசத்தில் இந்த தேச செல்வத்தின் பெரும்பாகம் அதாவது சரிபகுதிக்கு மேலாகவே மதத் திற்கும். கடவுளுக்கு மென்று நாசமாக்கப்படுகின்றது. இதை யாராவது திரும்பிப்பார்க்கின்றார்களா என்று கேட்கின்றோம். போறாக்குறைக்கு செத்துப்போன தேசியத்தலைவருக்கும் சிரார்த்தம் செய்யப்பட்டு ஜனங் களுக்கு சடங்கின் முக்கியத்தைப்பற்றி பிரசாரம் செய்து வழி காட்டப்பட்டாய் விட்டது. இருக்கின்ற தேசியத் தலைவர்களாலும் மகாத்மாக்களாலும் தினம் தினம் ராம பஜனையும், நாமாவளியும் கடவுள் தோத்திரமும் துதியும் காலம் தவராமல் கணக்குப்படி செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் தலைவர்களால் = வழிகாட்டிகளால் வரப்போகின்றதாம் சுயராஜியம் என்று கருதிக்கொண்டு இருக்கின்றோம் அதிலும் தகப்பன் எலும்பை கங்கையில் போடுவதால் தகப்பன் மோக்ஷத்திற்கு போகக் கூடுமென்று பூரணசுயேச்சைக்கார பண்டித ஜவாரிலால் நடந்துகொண்டதை நினைக்கும் போது இனி யாரை நம்புவது என்பது விளங்கவில்லை - நிர்க்க இன்றையத்தினம் மேல் நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் தங்கள் அரசாங்கத்தில் கீழ்தர சிப்பந்தி களுக்கு சம்பளங்களை உயர்த்தவும், நடுத்தர உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வை நிருத்தவும் மேல்தர உத்தியோகஸ்தர்கள் சம்பளம் குறைக்கவும் திட்டம் போடுவதை தேசிய வேலையாய்க் கொண்டிருக்கின் றார்கள். உதாரணமாக, பிரிட்டிஷ் மந்திரியும், நியூஸ்லண்ட் மந்திரியும். ஆஸ்திரேலியா மந்திரியும் தங்கள் தங்கள் சம்பளங்களை யாரும் சொல்லு வதற்கு முன்பே குறைத்துக்கொண்டு மற்ற உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தைக் குறைக்கத் திட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இது பணக்கார வாழ்வை இரக்கி ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதற்கு அடிகோலுவதாகும். இப்படிப்பட்ட அவர்களுடைய வாழ்வும் நாணை யமும், பொருப்பும், தகுதியும் இந்தியாவிலுள்ள உத்தியோகஸ்தர்களுடையதை விட தேசியத் தலைவர்களுடையதை விட சிறிதும் குறைந்ததல்ல என்றே சொல்லலாம். ஆனால் அவர்கள் வாங்குகின்ற சம்பளத்தைவிட இந்திய உத்தியோகஸ்தர்கள் இந்தியாவுக்கு சேவை செய்வதன் மூலமாய் வாங்கும் சம்பளங்கள் அனியாயமானதாய் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. இந்த சம்பளங்களுக்காகவே ஏழைகள் வருத்தப்படுகின்றார்கள் என்பதையாரும் கவனிப்பதில்லை. மேலும் இந்தமாதிரியான சம்பளக் கொள்ளைக்காரர் இன்று இந்தியாவின் பல பாகத்தில் சட்டமறுப்புக்கு உதவியாளராகவும், தேசியத் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் இருந்து வருவது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். இந்த நிலையில் இன்னும் அதிகாரம் அதிகமாக வேண்டுமென் றும் நடத்தியோகம் பெருக வேண்டுமென்றும் ராணுவம் முதலியது தங்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் கேட்கப்படுகின்றது. 

இராணுவ இலாக்கா இந்தியர்கள் கையில் ஒப்படைக்கப்படப் போவதால் இன்று என்ன புதிய நன்மை விளைந்துவிடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. வேண்டுமானால் இராணுவ இலாக்கா இந்திய மயமாக்கினவுடன் திருவாளர்கள் சீனிவாச சாஸ்திரிகள் பிள்ளைகளும், ராம சாமி அய்யர்கள் பிள்ளைகளும், ரங்காச்சாரிகள் பிள்ளைகளும், குமாரசாமி சாஸ்திரிகள் பிள்ளைகளும், சர்மாக்கள் பிள்ளைகளும் கேப்டனாகவும், கர்னலாகவும், ஜனரலாகவும், பிரிகேடியர்களாகவும் வந்துவிடக் கூடுமே அல்லாமல் மற்றபடி ஏதாவது ஒரு ராஜியத்தைப் பிடித்து இந்திய ஆஷியின் எல்லையை விரிவாக்கிக் கொடுத்துவிடுவார்கள் என்று கருதக்கூடுமா என்று கேட்கின்றோம். வேண்டுமானால் இவர்களால் இந்தியாவைக் காப்பாற்று வதைவிட இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து உர்ச்சவங்கள், இந்து கோவில்கள். இந்து வருணாச்சிரம தர்மங்கள், இந்து சிரார்த்தங்கள், இந்து மனுதர்ம சாஸ்திரங்கள் புராணங்கள் முதலியவைகளே பத்திரமாய் காப் பாற்றப்படும். இவைகளுக்கு விரோதமாக யாராவது பேசினால் அவர்கள் பக்கம் ஜனரல் டையர் போல் பீரங்கிகளை திருப்பப்படுமே அல்லாது இவர் களால் வேறு என்ன செய்யக்கூடும். 

ஆகவே பொதுஜனங்கள் தன்னம்பிக்கையற்று பகுத்தறிவற்று மூடர் களாகவும், மூடநம்பிக்கைக்காரர்களாகவும் இருக்கும்வரை இந்த மாதிரியாக யாரோ சிலரால் ஏதோ வழிகளில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் படியான காரியம் நடந்து கொண்டுதான் வரும் என்பதில் அதிசயமொன்றுமில்லை. ஆதலால் எந்தக் காரியத்தையும் கண்மூடித்தனமாய் நம்பி விடாமல் பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் யோசித்துப் பார்க்கும்படி வேண்டு கின்றோம். 

குடி அரசு - தலையங்கம் - 22.02.1931

 
Read 24 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.